இறையரசன் கவிதை : முதல் கடமை
சொத்தில் களித்தே சிலர்வாழ
சோறும் இன்றிப் பலர்வாட
முத்தும் மணியும் சிலர்அணிய
மூடும் துணிக்கே பலர்அலைய
கொத்தளம் கோட்டையில் சிலர்வாழ
குடிசையும் இன்றிப் பலர்வாட
எத்தனை நாள்தான் பலர்பொறுப்பார்?
இவைகளைச் சமன்செயல் முதல்கடமை!
பஞ்சணை பட்டுடன் சிலர்வாழ
பாயும் இன்றிப் பலர்வாட
எஞ்சும் ரொட்டியை நாய்கொரிக்க
எச்சிலைப் பருக்கையைச் சேய்பொருக்க
கொஞ்சலும் குலவலும் கோபுரத்தில்
குமுறலும் வறுமையும் குடிசையிலே!
எஞ்சுமிக் கொடுமையைப் பொறுப்பதுவோ?
இவைகளைச் சமன்செயல் முதல்கடமை!
ஆண்டையாய்க் களித்தே சிலர்வாழ
அடிமையாய்த் துடித்தே பலர்வாட
மீண்டிடாச் சிறப்பில் சிலர்வாழ
மீளாத் துயரினில் பலர்வாட
தூண்டிலைப் போலே சிலர்வாழ
துடிக்கும் மீன்போல் பலர்வாட
ஏண்டா மாந்தனே! இதுஅறமோ?
இவைகளைச் சமன்செயல் உன் கடமை!
1 Comment